களவாணி

-

மெகா பட்ஜெட்டில் உருவாகி பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டு மண்ணைக் கவ்விய படங்களும் உண்டு,​​ சின்ன பட்ஜெட்டில் தயாராகி சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடு போட்டப் படங்களும் உண்டு.​ அதில் இரண்டாவது ரகம் "களவாணி'.

​ தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமம் அரசனூர்.​ அந்த கிராமத்தில் பல முறை ப்ளஸ் டூ தேர்வு எழுதியும் தேறாத இளைஞன் அறிக்கி.​ ​ பணத்தைக் கொடுத்து எப்படியாவது பாஸ் பண்ண நினைக்கிறான்.​ பெண்களை பார்த்து பல் இளிப்பது,​​ நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது,​​ ஊர் சுற்றுவது,​​ பக்கத்து ஊருக்குச் சென்று கூத்து பார்ப்பது என்று ஊதாரித்தனமாக இருப்பவன்.

​ ராணிமங்கலத்திலிருந்து அரசனூர் வழியாக படிக்கச் செல்லும் மகேஸ்வரியிடம் விளையாட்டாக பேசிப் பழக ஆரம்பிக்கிறான் அறிக்கி.​ அவள் மீது உள்ள ஏக்கம் காதலாக மாறி அவளையும் காதலிக்க வைக்கிறான்.​ அறிக்கியின் சில நல்ல செயல்கள் அவளுக்குப் பிடித்து போனதால் அவளும்,​​ காதல் குளத்தில் இறங்கி நீச்சலடிக்கிறாள்.

​ ​ நண்பனின் காதலை சேர்த்து வைப்பதாக குடிபோதையில் ஒரு பெண்ணை கடத்தி அவமானப்படுகிறான் அறிக்கி.​ அதனால் அவன் மீது "பொம்பளை பொறுக்கி' என்ற முத்திரை விழுகிறது.​ மகேஸ்வரியை பார்க்க கோவில் திருவிழாவுக்குச் சென்றபோது அங்கு ஆட வந்த ஆட்டக்காரியை கடத்த வந்ததாக அறிக்கியை அடித்து விரட்டுகின்றனர்.​ இதனால் மனம் உடைந்து அறிக்கி மீது கோபமாகிறாள் மகேஸ்வரி.​ துபாயில் இருந்து திரும்பிய அறிக்கியின் தந்தை இளவரசு,​​ கிரகநிலை சரி இல்லாததால் மகன் இப்படி இருப்பதாக நினைக்கும் மனைவி சரண்யாவையும்,​​ தாயின் அறியாமையால் ​ கெட்டு போய் கிடக்கும் ஊதாரி மகனைப் பார்த்து நொந்து போகும் இளவரசு,​​ பாதி கட்டிய வீட்டை முழுவதுமாக முடித்து கிரஹபிரவேசம் நடத்த ஏற்பாடு செய்கிறார்.

​ ​ காதலி அருகில் இல்லாதபோது காதலின் ஆழத்தையும்,​​ வலியையும் உணரும் அறிக்கி,​​ அவளுக்கு நடக்க இருக்கும் திடீர் திருமணத்தை நிறுத்தி தனது பெற்றோரின் ஒப்புதலோடு மகேஸ்வரியை எப்படி கை பிடிக்கிறார் என்பது மீதி படம்.

​ ​ ஒரே பாட்டும்,​​ கூத்தும்,​​ நக்கலும்,​​ நையாண்டியும்,​​ எகத்தாளமுமாக படம் ஜாலியாகப் போகிறது.​ முதல் பாதியில் ஜாலின்னா,​​ இரண்டாம் பாதி செம விறுவிறுப்பு.​ படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் கதை புள்ளட் வேகத்தில் சென்றிருக்கும்.​ இப்படத்தை இயக்கியிருக்கும் சற்குணத்துக்கு இது முதல் படமாம்.​ ஆனால் பல படங்களை இயக்கி அனுபவம் பெற்ற ஆற்றல் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.​ சபாஷ் சற்குணம்!

​ "பசங்க' படத்தில் மீனாட்சி சுந்தரமாக வந்த விமல் இப்படத்தில் அறிக்கி என்ற அறிவழகனாக வாழ்ந்திருக்கிறார்.​ அவரது வேட்டி கட்டிய நடை,​​ பவுடர் மடித்த கைக்குட்டை,​​ வாத்தியாரிடமிருந்து சிகரெட்,​​ உர மூட்டை திருடுவது,​​ பாரில் குடிகாரனிடம் பணத்தை அபேஸ் செய்வது என காட்சிக்கு காட்சி கதையின் நாயகனாக பரிமளித்திருக்கிறார்.

​ ​ மகேஸ்வரியாக வரும் கேரளத்து வரவு ஓவியா,​​ பள்ளிக்கூட சீருடையுடன் வரும்போதாகட்டும்,​​ பாவாடை தாவணியில் வரும்போதாகட்டும் அழகு ஓவியம் தான்!​ ​ பயந்து பயந்து பேசுவது,​​ சிரித்தவாறே காதலை பாதி மறைத்தும்,​​ பாதியை சொல்லியும அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள்,​​ அவர் திறமையானவர் என்பதை பறைசாற்றுகிறது.​ ​

​ ​ பிள்ளையை விட்டுக் கொடுக்காத பாசக்கார அம்மாவாக சரண்யா அசத்தியிருக்கிறார்.​ அவரது கணவராக இளவரசுவும் கலக்கியிருக்கிறார்.​ அவருடைய கோபம் "புஸ்' என ஆகும்போது தியேட்டரில் சிரிப்புதான்.​ கஞ்சா கருப்பின் அந்த விஷம் குடித்த காமெடி காட்சி வயிறை பதம் பார்க்கிறது.​ ​

​ ​ இளங்கோ என்ற வில்லன் பாத்திரம்,​​ விமலின் தங்கச்சி பாத்திரம் யதார்த்தத்தின் வெளிப்பாடு.

​ எஸ்.எஸ்.குமரனின் இசையில்,​​ "டம்ம...​ டம்ம...',​ "பேஞ்ச மழை...' ஆகிய பாடல்கள் ரசிக்க முடிகிறது.​ தஞ்சையின் நஞ்சை,​​ புஞ்சை பசுமையை கண்களை குளிர வைக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.

​ மனதைத் திருடும் "களவாணி'.

கருத்துக்கள்

Nice movie, i like this movie very much.

By mahesh
8/7/2010 4:58:00 PM

குப்பைப் படங்களை எல்லாம் கோபுரமாக்கி காட்டும் சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகள் எப்போது திருந்தப் போகின்றன ?

By Sathy
7/28/2010 10:42:00 PM

school student always no study, only love. tamil culculter is where?. student manthi kedukum enpathil no doubt

By sasikumar
7/25/2010 5:15:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.